தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டருக்கு எந்தவித கட்டணமும் வசூல் செய்யப்படாது என்றும் ஸ்மார்ட் மீட்டருக்கு மாதாந்திர கட்டணம் எதுவும் இல்லை என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கடந்த இரண்டு நாட்களாக சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவி வருகின்றன. அதாவது ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி அதற்கு மாதாந்திர கட்டணம் வசூல் செய்யப்படும் என தகவல் பரவி வருகிறது. நிச்சயமாக சொல்கிறேன் ஸ்மார்ட் மீட்டருக்கு எந்த ஒரு கட்டணமும் வசூல் செய்யப்படாது.
ஸ்மார்ட் மீட்டருக்கு மாதாந்திர கட்டணம் எதுவும் இல்லை. தமிழகத்தில் மொத்தம் 2.37 கோடி மின் நுகர்வோர்கள் உள்ளனர். அதில் ஒரு கோடி பேருக்கு எவ்வித கட்டணம் மாற்றமோ எவ்வித கட்டணம் உயர்வோ, எவ்வித கட்டணமோ இல்லை. 101 யூனிட்டிலிருந்து 200 யூனிட் வரையிலான 63.35 லட்சம் நுகர்வோருக்கு ஒரு மாதத்திற்கு 27.50 ரூபாய் என இரு மாதங்களுக்கு 55 ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இது ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் என்பதை விட மிகக் குறைவு தான். கடந்த ஆட்சியில் 1.59 லட்சம் கோடி கடன் வைத்து விட்டு சென்றுள்ளனர். அதற்கு வட்டி மட்டுமே 16 ஆயிரத்து 500 கோடி. நிர்வாக சீர்கேட்டால் மின்வாரியம் இழுத்து மூடும் நிலையில் இருந்தது. அதற்காக மின் கட்டண சீரமைப்பு செய்யப்பட்டது. இல்லாவிட்டால் மத்திய அரசு மானியம் மற்றும் வங்கி கடன் ஆகியவை பெற முடியாத நிலை உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் 2012 முதல் 2014 வரை மூன்று முறை 37 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.ஆனால் இன்றைக்கு திமுக ஆட்சியில் மின்கட்டணம் உயர்த்தப்படவில்லை என்ற பொய்யான மற்றும் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். எவ்வித பாதிப்பும் இல்லாமல் தமிழகத்தில் மின் கட்டணம் சீரமைக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.