தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர். பாலு, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களில் பெய்த கன மழையால் 2500க்கும் மேற்பட்ட வீடுகள், 50,000 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் 54 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்காக முதல்வரால் அமைக்கப்பட்ட அமைச்சர் குழுவின் ஆய்விற்குப் பிறகு முதல் கட்டமாக மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக மாநில பேரிடர் மேலாண்மை நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்டா மாவட்டங்களில் 49,757 ஹெக்டர் பரப்பளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.
எனவே அவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். அதனைதொடர்ந்து வெள்ள பாதிப்பை சீரமைக்க முதல் கட்டமாக மத்திய அரசிடம் ரூ.550 கோடி நிதி கேட்கப்பட்டுள்ளது. மேலும் நிரந்தர நிவாரணமாக ரூ.2079 கோடி கேட்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு சார்பில் இருந்து 6 பேர் கொண்ட குழு வெள்ள பாதிப்பை நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக இன்று மாலை தமிழகத்திற்கு வர உள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.