தமிழகத்தில் இந்த ஆண்டும் வழக்கத்தை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முடியும் நேரத்தில் தமிழகத்தில் வெளியில் அதிகரிக்க ஆரம்பிக்கிறது. ஏப்ரல், மே மாதங்களில் உச்சத்தை நெருங்கி வாட்டி வதைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கடந்த ஆண்டுகளை விட அதிக பட்ச வெப்பம் பதிவாகிறது. இதற்கு காற்று மாசு, வாகனங்கள் அதிகரிப்பு, காடுகள், மரங்கள் அழிப்பு, கான்கிரீட் காடுகளாக மாற்றம் என்று ஏராளமான காரணங்கள் சொல்லப்படுகின்றன.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இந்திய வானொலி மையம் இந்தியாவில் கோடை மற்றும் குளிர்கால பருவகால வானிலை முன்னெறிவுப்புக்களை இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கோடைக்காலத்துக்கான அதாவது மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான வெப்ப நிலை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதில் இந்த ஆண்டும் தமிழகத்தில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரக்கை விடுத்துள்ளது. குறிப்பாக ராஜஸ்தான், இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட், அருணாசலப்பிரதேசத்தில் இயல்பைவிட ஒரு டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை 0.37 முதல் 0.41 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அதிகமாக பதிவாகும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் குறைந்த அளவிலேயே வெப்பம் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு, மேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் கடும் அனல் காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.