தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியது, தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 83 லட்சத்து 56 ஆயிரத்து 631 தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. ஜூலை மாதத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீடு 17 லட்சம் வந்துள்ளது. தமிழகத்தில் 3 நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இருக்காது. தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் வசூலிப்பதால் பொதுமக்கள் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை.
இந்தியாவிலேயே முதன்முறையாக சி.எஸ்.ஆர் நிதி மூலம் தனியார் மருத்துவமனைகளில், பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. அந்த திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்படும்.
தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் 2 கோடியை நெருங்கி வருகிறது. தனியார் மருத்துவமனைகள், தன்னார்வலர்கள் ஒன்றிணைவதால் கூடுதல் தடுப்பூசிகள் செலுத்த முடியும். தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்பது உண்மை தான் என்று அவர் கூறியுள்ளார்.