தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து மாணவர்களின் நலனை கருதி கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தனர். இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனிடையே தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய அவதாரமான ஒமைக்ரான் வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதுவரையிலும் தமிழகத்தில் 121 நபர்களுக்கு ஒமைக்ரான் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனா தினசரி பாதிப்பும் அதிகரித்து வருகிறது.
இதனால் 1- 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வருகின்ற 10ம் தேதி முதல் நேரடி முறையில் வகுப்புகள் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும் ஆன்லைன் மூலமாக மேற்கண்ட வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது பொதுத்தேர்வு எழுத இருக்கும் 10- 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில், பொதுத்தேர்வுகளை நடத்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 10- 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மூடிவிட்டு, ஆன்லைன் மூலமாக பாடங்களை நடத்த வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர் கூறியபோது, தற்போது கொரோனா தொற்றின் 3-வது அலை அதி வேகத்தில் பரவி வருகிறது.
சுகாதாரத்துறை அமைச்சரே கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதாக தெரிவித்துள்ளார். ஆகவே நிலைமை இப்படி இருக்கும்போது எப்படி மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்ப முடியும். இதற்கிடையில் பொதுத்தேர்வு முக்கியம் தான். ஆனால் கொரோனா பாதிப்பு குறையும் வரை மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்களை நடத்த வேண்டும் என தெரிவித்தனர். இதற்கு முன்பாக 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளை மூட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.