தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 100க்கும் மேல் பதிவாக்கி வருவதை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படுமா என்ற கேள்விக்கு சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார். அதில், பரிசோதனையில் 10 சதவீதத்தைத் தாண்டும் போது அல்லது தொற்று ஏற்படும் இடங்களில் 40 சதவீதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் கொரோனாவால் பாதித்தவர்கள் அனுமதிக்கப்படும் போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். தற்போது தமிழகத்தில் அந்த மாதிரியான நிலை இல்லை என்றும் மக்கள் இதனால் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். இருந்தாலும் அப்படி ஒரு நிலையை உருவாக்காமல் மக்கள் அனைவரும் சரியாக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.