தமிழகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் 2,000 ரூபாயாக உயர்த்தப்படும், சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களுக்கு முன்மாதிரி கிராம விருது வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரின்போது ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்டார்.
இந்நிலையில் ஊராட்சித் தலைவர்களுக்கான மதிப்பூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கிராம ஊராட்சிகளில் கிராம ஊராட்சி தலைவர்கள் அந்த ஊராட்சியில் நிர்வாக அலுவலர் என்கிற முறையில் கிராம ஊராட்சியில் நடைபெறும் மாநில அரசு திட்டங்கள் மற்றும் மத்திய அரசு திட்டங்கள் ஆகியவற்றை முழுமையாக செயல்படுத்தும் முக்கிய பொறுப்புகளில் இருக்கின்றனர்.
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994ன் பிரிவு 82ல் மேற்கொள்ளப்பட்ட ஊராட்சிகள் திருத்த சட்டம் 2012ன் படி கிராம ஊராட்சி தலைவர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியத்தை காலத்திற்கேற்ப அரசு நிர்ணயிக்கும் விகிதத்தில் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஊராட்சித் தலைவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.