காஞ்சிபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு தொடர்பாக 3 ஆயிரம் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற மெகா மனித சங்கிலியில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், எம்எல்ஏ போன்றோர் கலந்துக்கொண்டனர். தமிழகம் முழுதும் பெருகி வரும் போதைப் பொருள் பயன்பாடுகளை தடுத்திடவும், போதைப்பொருட்கள் கடத்தலை இரும்புகரம் கொண்டு தடுத்திடவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் பொதுமக்கள், இளைஞர்கள், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அந்த வகையில் காஞ்சிபுரம் பள்ளிக்கல்வி துறையின் சார்பாக அம்மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான காமராஜர் சாலை,அன்னை இந்திராகாந்தி சாலை,மேற்கு ராஜவீதி, செங்கழு நீரோடைவீதி, பூக்கடை சத்திரம், கிழக்கு ராஜவீதி, பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற போதைப் பொருள் விழிப்புணர்வு மனிதச் சங்கிலியில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி,காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர், எம்எல்ஏ சி.வி.எம்.பி எழிலரசன், முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவர்கள் பள்ளி மாணவ-மாணவிகளுடன் கை கோர்த்து மனித சங்கிலி அமைத்து, போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தனர். காலை நேரத்திலேயே சாலை ஓரங்களில் பள்ளி மாணவ மாணவிகள் கைகோர்த்து மனித சங்கிலி அமைத்து நின்று போதைப்பொருள் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது. அதேபோன்று போதைப் பொருட்களுக்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.