தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு பற்றி அரசு அறிவித்துள்ளது. அதன்படி கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஜூலை 6ஆம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கிய நிலையில் நேற்றுடன் கால அவகாசம் முடிவடைந்தது. இந்நிலையில் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.
பொறியியல் கலந்தாய்வை நடத்தும் தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் ரேண்டம் எண்ணை வெளியிட்டார். மாணவர்கள் இணையதளத்தை பார்த்து தங்களுக்கான ரேண்டம் எண்களை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.இ.படிப்புகளுக்கு 1.74 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் 1.43 லட்சம் பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர். கட்டணம் செலுத்தியவர்களுக்கான ரேண்டம் எண் www.tneaonline.org-ல் வெளியிடப்பட்டுள்ளது.