தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப் பருப்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி, இந்தத் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் கடந்த 4-ஆம் தேதி அன்று தொடங்கி வைத்தார். மேலும் ரேஷன் கடைகளில் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மற்றும் 2 மணி முதல் 6 மணி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு முன்பே குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பில் அனைத்து பொருட்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஏற்கனவே வழங்கப்பட்ட தொகுப்பில் குறைபாடு இருந்தால் அதை சரி செய்ய ஆவன செய்ய வேண்டும் என்றும், தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.