தமிழகத்தில் தற்போது BA 5 என்ற உருமாறிய தொற்று பரவி வருகிறது. ஏப்ரல் மாதத்தில் மரபணு பகுப்பாய்வு செய்யப்பட்ட மாதிரிகளில் 5% மட்டுமே இருந்த இந்த தொற்று வகை ஜூன் மாதத்தில் 30 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த தொற்று தொடர்பான பிரத்தியேக அறிகுறிகளையும், யாருக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பற்றியும் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி BA 5 கொரோனாவால் பாதிக்கப்பட்டால் மூக்கிலிருந்து சளி, தண்ணீர் வருவது முக்கிய அறிகுறி. காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மட்டும் இருக்கும். தொண்டை வலி, உடல் வலி கடுமையாக இருக்கும்.
இந்த வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் மக்கள் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது. மேலும் BA 5 தொற்று பரவல் காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆறு பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களின் மூன்று பேருக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. மேலும் ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்தாதவர்களுக்கு இந்த நோய் தீவிரமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. எனவே பொதுமக்கள் தொற்றின் பாதிப்பை புரிந்து கொண்டு கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
இரண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. அது மட்டுமில்லாமல் அரசு விதித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். மக்கள் அதிகமாக உள்ள இடங்களில் முக கவசம் கட்டாயம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் மேற்கூறிய அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று தொற்று பரிசோதனை மேற்கொள்வது தங்களுக்கு,ம் தங்களை சுற்றி உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.