மாமல்லபுரத்தில் கடந்த 3 நாட்களாக பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் பன்னாட்டு சுகாதார மாநாடு நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் ஆராய்ச்சியாளர்கள், அறிவியலாளர்கள் மற்றும் சர்வதேச வல்லுநர்கள் உட்பட 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர் . இந்த மாநாட்டில் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ தொழில்நுட்பங்கள் குறித்த பல்வேறு அமர்வுகளும், 250 கட்டுரைகள் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற நிறைவு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, “தமிழகத்தில் புதிதாக 50 நகர்புற மற்றும் சுகாதார நிலையங்கள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்ததன் தொடர்ச்சியாக தமிழகத்தில் 2,000 துணை சுகாதார நிலையங்களும், 250 ஆரம்ப மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்களும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் வலியுறுத்துவோம். மேலும் மருத்துவ துறையில் காலியாக உள்ள பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் கூறியுள்ளார்.