தமிழகம் முழுதும் கொரோனா தொற்று தாக்கம் காரணமாக பல சிக்கல்களை மக்கள் சந்தித்து வந்தனர். அதுமட்டுமல்லாமல் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம், உற்பத்தி ஆகிய துறைகளை காட்டிலும் மீட்டெடுக்க முடியாத தினங்களாக மாணவர்களின் கல்வி சீரழிந்து விட்டது என்றே கூறலாம். அத்துடன் கொரோனாவின் முதல் மற்றும் 2வது அலையில் பள்ளிகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்தது. அதன்படி மாணவர்கள் பாடத்தை கற்றாலும் பள்ளிக்கு சென்று அங்கு இருக்கும் சூழலில் பாடம் கற்பது மிகவும் சிறந்ததாக இருந்து வந்தது. இதனை 2 ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இழந்து வந்தனர். இந்த நிலையில் சென்ற பிப்ரவரி மாதம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது 10,11, 12 வகுப்பு பயிலும் மாணவர்கள் அடுத்தாக வரவுள்ள பொதுத்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பாக 2021-2022 இந்த கல்வியாண்டிற்கான மானிய கோரிக்கையில் நம் நாட்டின் விடுதலைக்காக உழைத்த தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்றோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன்படி தற்போது தர்மபுரி மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் பேச்சுப்போட்டி அரசு கலைக்கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி அன்று முற்பகல் காலை 10 மணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகல் 2 மணிக்கும் தொடங்கி நடைபெற இருக்கிறது.
மேலும் பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூபாய் 5000, 2ம் பரிசாக ரூ.3000, 3ம் பரிசாக ரூ.2000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். அத்துடன் அரசுப் பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்பு பரிசு தொகை ரூபாய் 2000 வீதம் வழங்கப்படும். ஆகவே மொத்தம் 24,000 ரூபாய்க்கு பரிசுகள் வழங்கப்படும். எனவே தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் இந்த பேச்சு போட்டியில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.