தமிழகத்தில் தற்போது கோடைகாலம் தொடங்கி மக்களை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக மக்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். சென்னையில் மார்ச் மாதம் பகல்நேர வெப்பநிலையானது சராசரியாக 32.9 டிகிரி ஆகும். ஆனால் இந்த வருடம் மார்ச் 22 அதிகமான வெப்பநிலை கொண்ட நாளாக பதிவாகியுள்ளது. இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் 40.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருக்கிறது. அதேபோன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெப்பநிலை அதிகமாகி இருக்கிறது.
இதையடுத்து வெப்பச்சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக மார்ச் 22, 23 போன்ற நாட்களில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதுமட்டுமல்லாமல் , மார்ச் 24-26 வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதற்கிடையில் சென்னையை பொறுத்தவரையிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதன்பின் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அத்துடன் அதிகபட்சம் வெப்பநிலையானது 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சம் 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். அடுத்ததாக தமிழ்நாட்டில் அதிகபட்சம் வெப்பநிலையாக இன்று மற்றும் நாளை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.