சென்னை கட்டுமான பணிக்கான சிமெண்ட் விலை ஒரே வாரத்தில் மூட்டைக்கு ரூபாய் 70 அதிகரித்துள்ளதால் வீடு கட்டுவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாட்டின் பிற மாநிலங்களில் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும் சிமெண்ட் விலை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உயர்ந்து கொண்டே வருகிறது. இங்குள்ள சிமெண்ட் நிறுவனங்கள் தங்களுக்குள் பேசி வைத்து அவ்வபோது விலையை உயர்த்தி வருகிறது. சட்டசபை தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த ஆண்டு சிமெண்ட் விலை ரூபாய் 60 வரை உயர்த்தப்பட்டது.
இதனால் அரசு மற்றும் தனியார் கட்டுமான திட்டங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு போன்றோர் சிமெண்ட் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் மூட்டைக்கு ரூபாய் 50 வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சிமெண்ட் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த வார நிலவரப்படி முதல்தர சிமெண்ட் சில்லரை விலையில் ஒரு மூட்டை 380 ரூபாயாக இருந்தது தற்போது 450 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது பற்றி இந்திய கட்டுநர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராம பிரபு கூறிய போது, ஒரே வாரத்தில் சிமெண்ட் விலை மூட்டைக்கு 70 ரூபாய் உயர்ந்துள்ளது. பிற மாநிலங்களில் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும் சிமெண்ட் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. தமிழக அரசு தலையிட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சிமெண்ட் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதே போல் உக்ரைன் போரை காரணமாகக் கூறி டிஎம்டி., கம்பி விலை, மின்சார இணைப்பு, பிளம்மிங் பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.