கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் சமூக இடைவெளியுடன் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57லிருந்து 67ஆக உயர்ந்துள்ளதாக தகவல் அளித்துள்ளார்.
நேற்று வரை 50 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து 5 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர் என்று கூறியுள்ளார். தமிழத்தில் இதுவரை ஒருவர் மற்றுமே கொரோனா வைரஸிற்கு உயிரிழந்துள்ள நிலையில், கொரோனா அறிகுறி உள்ள 121 பேரின் ஆய்வு முடிவுகள் இன்னும் வரவேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறோம். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலியில் ஆலோசனை நடத்தியுள்ளேன். மாவட்ட ஆட்சியர்களுடன் பேசி அறிக்கை சமர்ப்பிக்க தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், தடையின்றி முக கவசம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 11 லட்சம் பாதுகாப்பு கவசம் 1.5 கோடி முக கவசங்கள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 17,089 படுக்கைகள் தயாராக உள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு பயன்படுத்த 3,018 வெண்டிலேட்டர்கள் உள்ளன என கூறியுள்ளார். மேலும் கொரோனா தடுப்பு பணிக்கு 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் ஒவ்வொரு குழுவிற்கும் பணிகள் வரையறுக்கப்பட்டுள்ளன என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா அறிகுறியுடன் 1,925 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், வீட்டு வாடகைதாரர்களின் பிரச்னை பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.