தமிழகத்தில் ஒமைக்ரான் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து வரும் 31-ஆம் தேதி மருத்துவ குழுவினரிடம் ஆலோசனை மேற்கொண்டு முதல்வர் முடிவெடுப்பார் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் இந்த தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்கியது. இதுவரை இந்தியாவில் 17 மாநிலங்களில் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் தமிழகத்திலும் ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்று பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.
தமிழகத்தில் ஒமைக்ரான் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து வரும் 31-ஆம் தேதி மருத்துவ குழுவினரிடம் ஆலோசனை செய்து முதல்வர் அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள மரபணு பரிசோதனை மையத்தில் ஒமைக்ரான் பாதிப்பை கண்டறிய முடியும் என்றும், பாதிப்பை கண்டறிந்து அறிவிப்பதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.