தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஊரடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி திருப்பூரில் பால், மருந்தகம் உள்ளிட்ட கடைகளைத் தவிர பிற கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணி வரை மட்டுமே செய்யப்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை 50 சதவிகித இருக்கைகளுடன் செயல்படலாம். அதேநேரம் இரவு 9 மணிவரை ஹோட்டலில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மாவட்டத்தில் வணிக வளாகங்கள், சூப்பர் மார்கெட்டுகள் இயங்க தடை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாகை மாவட்டத்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் வருவதற்கும் நாகை மாவட்ட ஆட்சியர் தடைவிதித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக இந்து, கிறிஸ்துவ, முஸ்லீம் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை பக்தர்கள் வழிபாடு முற்றிலுமாக தடைசெய்யப்படுகிறது. விலங்குகள் பலியிடுதல், நேர்த்திக்கடன் செலுத்துதல், திருவிழாக்கள் நடத்துதல், ஜெப கூட்டங்கள், மசூதிகளில் கூட்டுத் தொழுகைகள், மத ஊர்வலங்கள் உள்பட அனைத்து மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் தடைவிதிக்கப்படுகிறது .
ஆடித்திருவிழாவை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மற்றும் அனைத்துக் கோயில்களிலும் ஆகஸ்ட் 4 முதல் வரும் 12 ஆம் தேதி வியாழக்கிழமை வரையில் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதியில்லை.
கோவையில் ஆகஸ்ட் 3 முதல் காய்கறி, மளிகைக் கடைகள், பேக்கரிகள், டீ கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மீன, இறைச்சிக் கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், டாஸ்மாக் மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.