தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணியும் பரிசோதனை எண்ணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய ஊரடங்கு கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. மளிகை மற்றும் காய்கறி கடைகள் மதியம் 12 மணி வரையும், தேநீர் கடைகள் மதியம் 2 மணி வரையும் செயல்படும். திருமணம் மற்றும் இறுதி ஊர்வல நிகழ்ச்சி களில் 20 பேர் வரை மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு வழக்கம்போல் அமலில் இருக்கும். இந்த கட்டுப்பாடுகளை மீறி செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.