தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி 138 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 22 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்கள் பதவியேற்றனர். நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கும், மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கும் இன்று (மார்ச்.4) மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.
மறைமுக தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் வாக்களிக்க உள்ளனர். திமுக கூட்டணியே 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பெரும்பான்மை பெற்றுள்ளதால், பெரும்பாலான பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்படும் நிலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை 9.30 மணிக்கு மறைமுக தேர்தலுக்கான கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மறைமுக தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் வேட்புமனுக்கள் பெறப்படும் எனவும், போட்டி ஏதேனும் இருந்தால் வாக்குச்சீட்டு முறையில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி ஆணையர் தேர்ந்தெடுக்கப்படும் மேயருக்கு அப்போதே பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். பிறகு செங்கோல், சங்கிலி மற்றும் அங்கி ஆகியவை மேயருக்கு வழங்கப்பட்டு, இருக்கைக்கு அழைத்துச் சென்று அமரவைக்கப்படுவர். இதனையடுத்து உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் முடிவுக்கு வருகின்றன.