தமிழகம் முழுவதும் 3 கோடியே 60 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. இந்நிலையில் மின் நுகர்வோர் பயன்பெறும் வகையில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னை தியாகராய நகரில் 1 லட்சத்து 41 ஆயிரம் மின் இணைப்புகளில், முதற்கட்டமாக 90 ஆயிரம் ஸ்மார்ட் மீட்டர்கள் சோதனை அடிப்படையில் இன்று முதல் பொருத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இத்திட்டத்தை சோதனை முறையில் தொடங்க முடிவெடுக்கப்பட்டு, திட்ட செலவாக ரூ. 144 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்திய பிறகு மின்சாரதுறை சார்ந்த ஊழியர்கள் நேரடியாக கணக்கெடுப்பை நடத்தாமல், மென்பொருள் மூலம் மின் கணக்கெடுப்பு தேதி வரும்போது நேரடியாக மின் நுகர்வோரின் செல்போன்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
அதன்மூலம் நுகர்வோர் தங்கள் மின் கட்டணத்தை செலுத்திக்கொள்ளலாம் என்று தெரிகிறது. இந்த திட்டத்திற்கான வரவேற்பைப் பொருத்து தமிழ்நாடு முழுவதும் 2026-ஆம் ஆண்டுக்குள் 3 கோடியே 60 லட்சம் நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் எனவும் மின்வாரிய அலுவலர்கள் கூறுகின்றனர்.