காச நோயாளிகள் மற்றும் கர்ப்பிணியரை கண்டறிந்து பதிவு செய்யும் ஆஷா பணியாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஆஷா பணியாளர்கள் தொகுப்பூதியம், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், அடையாள அட்டை, இலவச பேருந்து பயணம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் விடுத்துள்ளனர். இது அனைத்தும் முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு விரைவில் நிறைவேற்றப்படும்.
இவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதில் எந்த வித பிரச்சனையும் கிடையாது. எனவே மாநிலம் முழுவதும் உள்ள 2,650 ஆஷா பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். நகர்ப்புறங்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் நிலை அமைந்துள்ளது. கிராமப்புறங்களிலும் பணியாளர்கள் அரசு பேருந்தில் இலவச பயணம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் நியமிக்கப்படும் அனைத்து ஆஷா பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை மட்டுமே வழங்கப் படுகின்றது.
காசநோய் மற்றும் கர்ப்பிணி அரை கண்டறிந்து பதிவு செய்பவர்களுக்கு கூடுதலாக 1000 ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதனைப்போலவே நாற்பத்து இரண்டு வயதுக்கு உட்பட்ட பிளஸ் 2 முடித்தவர்களுக்கு 2 ஆண்டு பயிற்சி அளித்து ஆண்டுக்கு 60 பேர் நிரந்தர ஊழியர்களாக நியமிக்கப்படுவார்கள். மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள 4900 நர்சுகள் அந்தந்த மாவட்ட கலெக்டர் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் என்று கூறியுள்ளார்.