தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது, அதன்படி ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன் பிறகு 100 ரூபாய்க்கு கீழ் குறைந்த பெட்ரோலின் விலை, கடந்த சில வாரங்களாக மீண்டும் 100 ரூபாயை கடந்துள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் முதல் முறையாக கடலூர் மாவட்டத்தில் டீசல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி ஒரு லிட்டர் டீசல் விலை 100.29 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று காட்டுமன்னார்குடி கோவிலிலும் டீசல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட மற்ற மாவட்டங்களிலும் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கி வருவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன் விளைவாக காய்கறி மற்றும் மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.