தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளால் இளைஞர்கள் தங்களுடைய பணத்தை இழந்து விடுவதோடு மட்டுமல்லாமல் தற்கொலையும் செய்து கொள்கின்றனர்.
இந்த சம்பவமானது அதிகரித்துக்கொண்டே இருந்த நிலையில் இது போன்ற ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பல தரப்பினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 21- ஆம் தேதி அன்று ஆன்லைன் ரம்மி விளையாட்டிர்க்கு அதிமுக அரசு தடை செய்தது. ஆனால் அந்த சட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆன்லைன் விளையாட்டுகள் ஏன் தடை செய்யப்படுகிறது என்ற சரியான காரணங்கள் சட்டத்தை நிறைவேற்றும் போது கூறவில்லை. எனவே சரியான காரணங்கள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டிற்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க இயலாது என்று கூறி, தமிழக அரசின் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
எனினும் அதற்குரிய விதிமுறைகளை உருவாக்கி புதிய சட்டம் இயற்றுவதற்கு தடை இல்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அதே தீர்ப்பில் கூறியது. இதையடுத்து ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து தற்போதைய தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.