தமிழகத்தில் மதுபானங்கள் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்படாது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது இந்த விவாதத்தில் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி கூறுகையில்: “தமிழக அரசு டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதற்கு பரிசீலனை செய்து வருகிறது. கடந்த ஆட்சியில் ஆயிரம் மதுக்கடைகள் குறைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய நேர்ந்தால் ஆண்கள் அனைவரும் ஆன்லைனிலேயே மதுபானங்களை ஆர்டர் செய்து விடுவார்கள்.
அப்படி அவர்கள் ஆர்டர் செய்து விட்டு வெளியில் சென்று விட்டால், அதனை வீட்டில் உள்ள பெண்களே வாங்க கூடிய சூழ்நிலை உருவாகும். இதனால் சமூகத்தில் பெண்களின் மீதான மதிப்பு குறையும். இதுபோன்ற முடிவை தமிழக அரசு எடுக்க கூடாது” என்று கூறினார். இதற்கு பதிலளித்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆய்வுத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழகத்தில் ஆன்லைன் மூலமாக மது விற்பனை செய்யப்படாது என்று தெரிவித்தார். எந்த நிலையிலும் தமிழகத்தில் ஆன்லைன் மது விற்பனை என்பது இல்லை என அமைச்சர் விளக்கம் அளித்தார்.