Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசின் கடன் சுமை பற்றி….. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின் படி பணவீக்கத்தை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் மக்கள் இடையே பணப்பழக்கம் குறையாத அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, தொழிற்சாலைகள் முழு அளவில் இயங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் வாயிலாக சாமானிய மக்களுக்கு அவர்களின் வருவாய் தடைபெறாத வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

மத்திய அரசு பணவீக்கத்தை கட்டுப்படுத்தக்கூடிய விதமாக பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு முன்பே, தமிழ்நாடு அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்தது. கொரோனா காலத்திலும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தக்கூடிய அடிப்படையில் 13 ஆயிரம் கோடி செலவில் பொதுவிநியோகம் உள்ளிட்ட பல வகைகளில் தமிழக அரசு மேற்கொண்டது. தமிழகத்தின் வருவாய் அதிகரிக்கும் சமயத்தில், அரசின் கடன்குறைப்பு மற்றும் பெற்ற கடனுக்கான வட்டி குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டது.

தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா, கருணாநிதி போன்றோர் இருந்தவரை தமிழகத்தின் நிதி நிலை மோசமாக இருந்ததில்லை. கடந்த 2014ஆம் வருடத்திற்கு பின்னான, சென்ற 6 ஆண்டுகளாகதான் தமிழக அரசின் நிதிநிலைமை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. மாநில அரசுகள் கடன்பெறுவதில் மத்திய அரசு பல கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அதே சமயத்தில் மத்திய அரசு கட்டுப்பாடின்றி அதிகளவு கடன்களை பெற்றுவருகிறது.

தி.மு.க ஆட்சி பொறுப்பை ஏற்று, பொதுவிநியோக திட்டத்தின் பங்களிப்பு, தேவையற்ற செலவுகளை குறைப்பது மற்றும் துறைகளின் வாயிலாக பெறக்கூடிய வருவாயை சீரமைப்பது உள்ளிட்ட பல சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஜிஎஸ்டி வருவாய் சென்ற ஆண்டைவிட 37 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் கடந்த வருடத்தை விட வருவாய்வரி 23 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் வாயிலாக அரசின் கடனும் சிறிது குறைக்கப்பட்டு உள்ளது. அரசின் ஒட்டு மொத்த வருவாய் பற்றாக்குறை 4.61 சதவீதம் ஆக இருந்த நிலையில், இப்போது 3.50 சதவீதம் ஆக குறைந்துள்ளது. இதை வரும் காலங்களில் மேலும் குறைக்க திட்டமிட்டு இருக்கிறோம்” என்று கூறினார்.

Categories

Tech |