நாடு முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் சிசேரியன் முறை பிரசவம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நாட்டிலேயே தெலுங்கானாவிற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தான் சிசேரியன் வழியில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் என்பதும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இரண்டில் ஒரு குழந்தை சிசேரியன் மூலம் பிறப்பதும் அரசு மருத்துவமனைகளை காட்டிலும் தனியார் மருத்துவமனைகளில் தான் சிசேரியன் பிரசவங்கள் அதிகம் என்பதும் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் அறுவை சிகிச்சை செய்து குழந்தை எடுக்கும் முறை அதிகரித்து விட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இயல்பாகவே 10 முதல் 20 சதவீதம் வரை குழந்தைகள் சிசேரியன் செய்யப்படும் என்றும் இப்போது அது 44.9% அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. நகர்புறங்களில் 37.5 சதவீதம் என்றும் கிராமப்புறங்களில் 35.1 சதவீதம் என்றும் சிசேரியன் உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.