ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி பணத்தை இழந்த இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை ரயில் நிலையம் அடுத்த கீரைத்தோட்டை எனும் பகுதியின் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் உடல் சிதைந்த நிலையில் இளைஞர் ஒருவர் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து திருச்சியிலிருந்து சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே காவல்துறையினர் நிகழ்வு இடத்தில் பார்த்த போது இளைஞர் ஒருவர் உயிரிழந்து கிடந்தார். இதில் அந்த இளைஞர் யார் என்பது இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விடை தெரியவில்லை. அதன் பின் மணப்பாறை பேருந்து நிலையம் சுகாதார வளாகத்தில் பணியாற்றி வரும் ரவி என்பவர் மகன் தான் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி அடையும் தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது உயிரிழந்த இளைஞர் மையம்பட்டி ஒன்றியம் சமயபுரம் அடுத்த மலையாண்டிபட்டியை சேர்ந்த ரவியின் மகன் சந்தோஷ் என்பது தெரியவந்துள்ளது. இவர் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் BE நான்காம் வருடம் படித்து வந்துள்ளார். கடந்த ஆறு மாத காலமாக இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி உள்ளார் ரம்மி விளையாட்டுக்காக வீட்டில் இருந்து நகை, பணம் போன்றவற்றை வீட்டிற்கு தெரியாமல் எடுத்து சென்றுள்ளார். இந்த நிலையில் வழக்கம்போல் செவ்வாய்க்கிழமை அன்று வீட்டில் இருந்த மோதிரம் காணவில்லை என பெற்றோர்கள் சந்தோஷிடம் செல்போனில் கேட்டுள்ளனர்.
அதற்கு நான் நகை பணத்துடன் வருகிறேன் என கோபமாக பேசியுள்ளார். அதன்பின் நேற்று இரவு 9.50 மணியளவில் என்னுடைய மரணத்திற்கு முழு காரணம் ஆன்லைன் ரம்மி தான் அதில் தான் அடிமையாகி அதிக பணம் இழந்ததால் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன் என ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். அதன் பின் பெற்றோரால் தொடர்பு கொள்ள முடியவில்லை இந்த நிலையில் தான் சந்தோஷ் ரயில் முன் பாய்ந்து சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் உடற்கூறு ஆய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.