சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர், அரசு செயலாளர், துறை தலைவர்கள், அங்கக வேளாண் பிரதிநிதிகள் மற்றும் அங்கக வேளாண்மை அரசு சாரா பிற நிறுவனங்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தின் போது தமிழகத்தில் அங்கக வேளாண்மை கொள்கையை உருவாக்குதல் தொடர்பான முக்கிய ஆலோசனைகளை இறையன்பு கூறினார். இதுகுறித்து இறையன்பு கூறியதாவது, இந்த கொள்கையில் 5 வருடங்களுக்கு பிறகு ஆய்வு செய்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
இந்த அங்கக வேளாண்மையை விவசாயிகளின் விருப்பத்தின் பேரில் செயல்படுத்தலாம். தற்போது அங்கக வேளாண்மை செய்துவரும் விவசாயிகளின் வெற்றி தொடர்பாக ஒரு நூலை வெளியிட வேண்டும். பாரம்பரியமான வேளாண் உத்திகளை ஆராய்ந்து அது தொடர்பான உரிய ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்குவது இன்றியமையாதது. அதன் பிறகு வேளாண்மை துறையின் வேளாண்மை விரிவாக்கம் மையங்களில் உருவாக்கப்பட்ட அங்கக விதைகளை விற்பனை செய்வதற்கு தனி விற்பனை பிரிவினை ஏற்படுத்துவது அவசியமான ஒன்று.
இந்நிலையில் விவசாயிகளின் விருப்பத்தின் பேரில் கொள்கையை செயல்படுத்துவதால் அவர்களிடமிருந்து பல்வேறு விதமான கருத்துக்கள் பெறப்பட்டு ஒரு வார காலத்திற்குள் கொள்கையினை முடிவு செய்ய வேண்டும். மேலும் அடுத்த வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக அங்கக வேளாண்மை கொள்கையினை நடைமுறைப்படுத்தி அறிக்கையில் தெரிவிக்கும்படியாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.