தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை எந்த அளவிற்கு உள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்று உள்ளதை பார்க்கும் போது தமிழகத்தின் ஆக்சிஜன் தேவை அதிக அளவில் உள்ளதா என்ற கேள்வி எழுவதாக மதுரை கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 13 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு காரணம் போதிய அளவு ஆக்ஸிஜன் இல்லாத காரணம் என்று நோயாளிகளின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக ஆக்ஸிஜன் தேவை எவ்வளவு உள்ளது என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் செயல்படாமல் இருக்கும் ஆக்ஸிஜன் மையங்கள் எத்தனை உள்ளன என்றும், இதில் எத்தனை மையங்களை உடனடியாக திறந்து ஆக்ஸிஜனை தயாரிக்க முடியும் என்பது குறித்தும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டில் உள்ள HLL நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தும் ஏன் பயன்படுத்த வில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.