தனக்கான இணையை தேடி புலி ஒன்று 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புலிகள் சரணாலயத்தில் மூன்று வயதுடைய ஆண் புலி ஒன்று வசித்து வந்தது. இந்தப் புலி கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அவ்விடத்தைவிட்டு கிளம்பியது. தனக்கான இணையையும் இரையையும் தேடி அது பயணத்தைத் தொடங்கியது. இதனை தொடர்ந்து ஜிபிஎஸ் கருவி அந்த புலிக்கு பொருத்தப்பட்டது. மகாராஷ்டிராவில் தனது பயணத்தை தொடங்கிய அந்தப் புலி தெலுங்கானாவில் ஜூன் மாதம் தங்கியுள்ளது. அதுவரை அது நடந்த தூரம் 3000 கிலோ மீட்டர் என்பது உறுதியாகியுள்ளது.
7 மாவட்டங்களை கடந்து தெலுங்கானாவிற்கு வந்த அந்தப் புலி அங்கு சுற்றியுள்ளது. அதன் பிறகு தற்போது மீண்டும் மகாராஷ்ட்ராவில் உள்ள சரணாலயத்திற்கு திரும்பியுள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிர மாநில வனத்துறை அதிகாரி கூறுகையில் அந்த புலிக்கு எந்த எல்லை பிரச்சினையும் கிடையாது. அதற்கு தேவையான இரையும் கிடைத்துவிட்டது. இன்னும் அதற்கு இணை மட்டும்தான் கிடைக்கவில்லை.
இதனால் பெண்புலி ஒன்றை சரணாலயத்தில் விடலாமா என ஆலோசனை செய்து வருகின்றோம். தற்போது புலி இருக்கும் சரணாலயத்தில் அதிக இரை இருப்பதால் வேறு இடத்திற்கு அந்த புலி செல்வதற்கான வாய்ப்பு இல்லை எனக் கூறியுள்ளார். இதுவரை எந்த விலங்குகளும் இவ்வளவு தூரம் நடந்தது இல்லை என்பதால் அந்தப் புலிக்கு வாக்கர் என பெயரிடப்பட்டுள்ளது.