தனியார் சர்க்கரை ஆலை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சில்லாங்காட்டுபுதூரில் தனியார் சக்கரை ஆலை அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இந்த அலுவலகம் அறச்சலூர் பகுதியில் உள்ள சுமார் 2,100 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகளிடம் ஒப்படைத்த அடிப்படையில் கரும்புகள் பயிரிடப்பட்டு வருகின்றது. இங்கு தினம் தோறும் 700 டன் கரும்புகள் வெட்டப்பட்டு ஆலைக்கு அனுப்பப்படுகின்றது. இதனிடையே வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றது.
இதனால் விவசாயிகள் தனியார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதைத் தொடர்ந்து ஆலையின் துணைப் பொது மேலாளர் பார்த்திபன் மற்றும் நிர்வாகத்தினர், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது விவசாயிகள் கூறியுள்ளதாவது, விரைவில் கீழ் பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட இருக்கின்றது. அவ்வாறு தண்ணீர் திறக்கப்பட்டால் கரும்பு தோட்டத்தில் தண்ணீர் தேங்கும்.
இதனால் கரும்புகளை அறுவடை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும். இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும். ஆகையால் ஆலை நிர்வாகத்தினர் உடனடியாக கரும்பை அறுவடை செய்ய வேண்டும் என கூறினார்கள். இதற்கு ஆலை நிர்வாகத்தினர், தோட்டத்தை பார்வையிட்டு இன்னும் இரண்டு வாரத்துக்குள் ஒப்பந்த அடிப்படையில் பதிவு செய்த விவசாயிகளின் கரும்புகள் அறுவடை செய்யப்படும் என கூறினார்கள். இதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கலைந்து சென்றார்கள்.