தனியார் கல்லூரியில் நகை, பணத்தை திருடிச் சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகில் பேரை பகுதியில் வசித்து வருபவர் தோமஸ்ராஜ். இவர் மார்த்தாண்டம் வடக்கு தெருவில் ஞான தீபம் என்ற பெயரில் சமுதாயக் கல்லூரி ஒன்றை நடத்தி வருகின்றார். கடந்த 9ஆம் தேதி மாலை வழக்கம் போன்று கல்லூரி முடிந்த பின் பூட்டி விட்டு சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது அலுவலக அறையிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு ரூ 1,96,000 மற்றும் தங்கமோதிரம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. மர்ம நபர்கள் கல்லூரி நிறுவனத்தின் பின்புறம் உள்ள கதவை உடைத்து உள்ளே சென்று பணம், நகையை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தோமஸ்ராஜ் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர். இதையடுத்து தனிப்படை காவல்துறையினர் கல்லூரியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்து பார்த்தனர். அதில் ஒரு வாலிபரின் உருவம் பதிவாகி இருந்தது தெரிய வந்துள்ளது. அந்த காட்சி அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மார்த்தாண்டம் குருவிக்காட்டுவிளையில் வசித்த ரங்கநாதன் என்பவருடைய மகன் பிரகாஷ்(27) என்பது தெரியவந்துள்ளது. இவர் ஏற்கனவே குறுந்தாடி வைத்திருந்துள்ளார்.
மேலும் கல்லூரியில் திருடிய பிறகு அடையாளம் கண்டு பிடிக்காமல் இருக்க தாடியை எடுத்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நேற்று காலை பிரகாஷை கைது செய்துள்ளனர். அதன் பின் அவரிடம் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்முருகன் தலைமையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, அவர் கல்லூரியில் திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும் திருடிய தங்க மோதிரத்தை காப்புக்காட்டில் அடகு வைத்ததாகவும் தெரிவித்தார். இதனையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று நகையை மீட்டு உள்ளனர். மேலும் அவரிடம் இருந்த திருடிச் சென்ற பணத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் நடந்த நான்கு நாட்களில் திருடனை கைது செய்து பணமும், நகையும் மீட்ட காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.