கேரளாவின் கொல்லம் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சப்-கலெக்டர் யாருக்கும் தெரியாமல் தனது சொந்த மாநிலத்திற்கு தப்பி சென்றுள்ளார். இவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக அனைத்து மாநிலங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்திருந்தது. அதில் இந்தியர்கள் 677 பேரும், வெளிநாட்டவர் 47 பேரும் அடங்குவர். இதுவரை இந்தியாவில் குணமடைத்தவர்கள் எண்ணிக்கை 67 ஆக உள்ளது. மேலும், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கேரளா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 137, அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 135 பேருக்கு நோய் தோற்று இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், கேரள சப்-கலெக்டர் கடந்த மார்ச் 19ம் தேதியில் இருந்து கொரோனா தடுப்பு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இவர் முன்னதாக பிரிட்டன் சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இவர் எந்தவித அறிவிப்பும் இன்றி தனது சொந்த மாநிலமான உத்தரப்பிரதேசத்திற்கு சென்றிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், தனது அரசு பணிகளை முறையாக ஒப்படைக்காமல் சென்றுள்ளார் என கொல்லம் மாவட்ட ஆட்சியர் அப்துல் நாசர் குற்றம் சாட்டியுள்ளார். அரசு பதவியில் இருக்கும் அதிகாரியே இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது வருந்தக்கூடிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இது குறித்து உத்தரபிரதேச தலைமைச் செயலர் மற்றும் மத்திய அரசு பணியாளர் நலத்துறைக்கு தகவல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.