ஜார்க்கண்ட் மாநிலத்தில் உதடுகள் தைக்கப்பட்டு ரயில்வே தண்டவாளத்தில் கட்டப்பட்ட நிலையில் முதியவர் ஒருவர் இருப்பதைக்கண்ட அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு விரைந்த போலீஸார் அந்த முதியவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். வாய்ப்பகுதி தைக்கப்பட்டிருந்ததால் மருத்துவர்கள் அதனை அகற்றி அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். சிகிச்சையில் இருக்கும் முதியவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த முதியவரை அவரது வளர்ப்பு மகன் மற்றும் இருவர் சேர்ந்து கடுமையாக தாக்கிவிட்டு பின் முதியவரின் வளர்ப்பு மகன் கயிற்றைக் கொண்டு இவரது உதடுகளை தைத்து, கை கால்களை கட்டி ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ள பகுதிக்கு அழைத்துசென்றுள்ளனர். ரயில்வே தண்டவாளத்தில் உள்ள ஸ்லீப்பர் கட்டையுடன் முதியவரை கட்டிப்போட்டுள்ளார். ரயிலில் முதியவர் அடிப்பட்டு சாகட்டும் என்ற எண்ணத்தில் இவ்வாறு செய்துள்ளனர். இரவு 11 மணியளவில் தண்டவாளத்தை விட்டு அந்த மூவரும் தப்பியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.