தண்ணீர் பாட்டில் வாங்குவது போல நடித்து வாலிபர்கள் மூதாட்டியிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் ஞானப்பிரகாசம் குளக்கரை தெருவில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேரி(60) என்ற மனைவி உள்ளார். இவர் தனது வீட்டிற்கு முன் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் மூதாட்டியின் கடைக்கு மோட்டார் சைக்கிளில் இரண்டு வாலிபர்கள் சென்றுள்ளனர். அவர்கள் 100 ரூபாய் கொடுத்து மேரியிடம் தண்ணீர் பாட்டில் வாங்கியுள்ளனர்.
இதனையடுத்து மீதி சில்லரை கொடுப்பதற்காக மேரி கல்லாப் பெட்டியில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டிருந்த போது வாலிபர்கள் மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்க நகையை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து மேரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தண்ணீர் பாட்டில் வாங்குவது போல நடித்து மூதாட்டியிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.