Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தடைவிதிக்கப்பட்ட குளம்…. அனுமதியின்றி மீன் பிடிப்பு… “நோய் பரவும்” மக்கள் குற்றச்சாட்டு…!!

நஞ்சராயன் குளத்தில் அனுமதியின்றி சிலர் மீன் பிடிப்பதாக  பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நஞ்சராயன் குளம் ஊத்துக்குளி அருகே சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. திருப்பூரில் இயங்கி வரும் சாய ஆலைகள் பிளீச்சிங், பிரிண்டிங் தொழில் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இக்குளத்தில் கலப்பதால் குளத்திலுள்ள நீர் முற்றிலும் மாசுபட்டு விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.மேலும் சாயக் கழிவுகள் அதிக அளவில் சேர்வதால் இப்பகுதியைச் சுற்றியுள்ள விவசாய நிலங்கள் பாழடைந்து வருகிறது.

சாயக் கழிவுகள் அதிகம் உள்ளதால் குளத்தில் மீன் பிடித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்தால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மீன்பிடிக்க அனுமதி வழங்கப்படவில்லை. இக்குளத்தில் உள்ள நீரை சுத்தப்படுத்த பொதுமக்களும் ,சமூக ஆர்வலர்களும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்துள்ளனர்.அரசு தரப்பில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தும் குளத்தை முழுமையாக சுத்திகரிக்க இயலவில்லை.

இந்த நிலையில் நேற்று முன் தினம் சிலர் பொதுப்பணி துறை மூலம் அனுமதி பெற்று எஸ்.பெரியபாளையம் ஊராட்சியில் குளத்தை ஏலத்திற்கு எடுத்து மீன் பிடிப்பதாக கூறி குளத்தில் வலைவிரித்து மீன்களை பிடித்து உள்ளனர். இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஊராட்சி நிர்வாகத்தினர் நாங்கள் குளத்தை ஏலத்துக்கு விடவில்லை என தெரிவித்தனர்.

கழிவுநீர் அதிகம் உள்ள குளத்தில் மீன் பிடித்து விற்பனை செய்தால் பொதுமக்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது எனவும் நஞ்சராயன் குளத்திற்கு அதிக அளவில் குளிர்காலத்தில் வெளிநாட்டில் இருந்து பறவைகள் வருவதால் குளத்தை பறவைகள் சரணாலயமாக அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதனையடுத்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனுமதி இல்லாமல் மீன் பிடிப்பதை தடுக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |