தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அரசு தடை விதித்திருந்தது. அதன்படி சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் கடற்கரையில் பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. பொது இடங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடி கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை தவிர்த்து, வீடுகளில் புத்தாண்டு கொண்டாட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் கட்டுப்பாடுகளை மீறி மது போதையில் வாகனங்களில் சுற்றுபவர்களை கைது செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதனைப்போலவே சென்னையில் நேற்று இரவு 12 மணிக்குமேல் அத்தியாவசிய தேவை தொடர்பான வாகனங்கள் தவிர மற்ற வாகன போக்குவரத்திற்கு இன்று காலை 5 மணி வரை அனுமதி ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னையில் தடையை மீறி ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக 269 வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மது போதையில் வாகனம் ஓட்டியதாக 147 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.