கொரோனா தடுப்பூசி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் இருப்பு இல்லாததால் தடுப்பூசி போட வரும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
மயிலாடுதுறையில் நகர ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு பொது மருத்துவமனையில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றை இரண்டு முறை போட்டுக்கொள்ள வேண்டும். முதல் ஊசியை போட்ட பிறகு இரண்டாவது தடுப்பூசியை 15 நாட்களுக்கு பின் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இந்நிலையில் மயிலாடுதுறை நகர ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பெரியார் அரசு பொது மருத்துவமனையில் தடுப்பூசி போட வந்தவர்களை தடுப்பூசி போடாமல் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசியும் இருப்பு இல்லை. மேலும் தடுப்பூசி இரண்டு நாட்கள் கழித்து வந்து போட்டுக் கொள்ளுங்கள் என்று திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் தடுப்பூசி போட முடியாமல் திரும்பிச் செல்கின்றனர். கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டாம் கட்டமாக வரும் பயனாளிகளுக்கு மட்டும் போடப்படுகிறது. இதனால் கொரோனா தடுப்பூசிகளை அதிக அளவில் இருப்பு வைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும். பொதுமக்களை அலைக்கழிக்காமல் இருக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.