ஸ்கூட்டர் மீது கலவை இயந்திர வாகனம் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள வேங்கூர் ஊராட்சி குவளப்பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கான்கிரீட் கலவை எந்திர வாகனம் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்த இடத்திற்கு சென்றது. அப்போது அதே பகுதியில் வசிக்கும் சாம்பசிவம் என்பவர் வயலுக்குச் சென்றுவிட்டு ஸ்கூட்டரில் வந்துள்ளார். இதனை கவனிக்காத கலவை இயந்திரம் பின்னோக்கி நகர்ந்து சாம்பசிவம் ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது.
இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த சாம்பசிவம் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கலவை இயந்திர ஓட்டுநரான முரளி என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.