ஈரோடு மாவட்டத்திலுள்ள குரங்கன்பாளையம் ஓடையில் தடுப்பணை கட்டுவதற்கு தடை கோரிய மனுவுக்குப் பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நபாா்டு வங்கியின் கடன் உதவியுடன் தமிழகம் முழுதும் பல மாவட்டங்களில் ரூபாய் 38 கோடியே 72 லட்சம் செலவில் 14 தடுப்பணைகள் கட்டுவது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. இதில் ஈரோடு கொடுமுடிதாலுகா கொம்பனைபுதூரில் குரங்கன்பாளையம் ஓடையிலும் தடுப்பணை கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இவற்றிற்கு தடைகேட்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் தங்கவேலு என்பவா் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளாா்.
அந்த மனுவில் “தடுப்பணை கட்ட உத்தேசித்த பகுதியை ஆய்வு மேற்கொண்ட தொழில்நுட்பக் குழு, இந்த இடம் தடுப்பணை கட்டுவதற்கு உகந்தது அல்ல, மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும், அப்பகுதியிலுள்ள கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம் இருக்கிறது எனக் தெரிவித்துள்ளது” என்று குறிப்பிட்டிருந்தாா். இதையடுத்து மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.வி. தமிழ்ச்செல்வி போன்றோர் அடங்கிய அமா்வு இந்த மனுவுக்கு 4 வாரங்களில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்தனா்.