கொரோனா பேரிடர் காலத்தில் ஒட்டுமொத்த இந்தியாவும், நோய்த் தொற்றுக்கு எதிராக ஒரே வரிசையில் நின்று வலுவாக போராடி வருகிறது. தன்னார்வலர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் என பலரும் தங்களால் இயன்ற உதவிகளை நிவாரணமாக வழங்கி வருகின்றார்கள். இந்த நிலையில்தான் தற்போது நடிகை ஜோதிகா கொரோனா தடுப்பு பணிக்கான நிவாரணம் வழங்கியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு நடிகை ஜோதிகா ஒரு நிகழ்ச்சியில் பேசிய தாக ஒரு வீடியோ உலா வந்தது. அதில் தஞ்சை பெரிய கோவிலுக்கு உண்டியலில் பணம் போடுவதை விட்டுவிட்டு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு செலவு செய்ய வேண்டும் என்று சுட்டிக்காட்டி பேசி இருந்தார். இதற்கு இந்து அமைப்புகள், பாஜகவினர் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தன. ஆனாலும் நடிகர் சூர்யா ஜோதிகாவின் கருத்தில் உறுதியாக உள்ளோம் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது ஜோதிகா எந்த மருத்துவமனை சுட்டிக்காட்டி பேசினாரோ அதே மருத்துவமனைக்கு தான் ( தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு) உபகரணங்கள் வாங்குவதற்கு 25 லட்சம் ரூபாய் ஜோதிகா ரசிகர் மன்றம், சார்பிலும் அகரம் சார்பிலும் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்களும் ஜோதிகா சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வழங்கப்பட்டது