அரசின் பசுமை வீடுகள் கட்டும் பணிகளை கிடப்பிலேயே போடப்பட்டதால் பழங்குடியின மக்கள் வசிக்க இடமின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள குரங்கணி மலைப்பகுதியில் முதுவார்குடி பழங்குடியினர் கிராமம் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தில் 40க்கும் மேற்ப்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் இப்பகுதிக்கு சாலை வசதிகள் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதியினர் ஆபத்தான மலைப்பாதையில் ஜீப்களில் மற்றும் நடத்து செல்ல வேண்டிய அவலம் இருந்து வருகிறது. இதனையடுத்து அப்பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் தற்போது சேதமடைந்த நிலையில் இருந்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டு 2020-2021ஆம் நிதியாண்டியில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ், போடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 14 வீடுகளை பராமரிக்க டெண்டர் விடப்பட்டது. ஆனால் ஓரிரு வீடுகளுக்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மற்ற பணிகள் பாதியிலே நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழக அரசின் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தில் அப்பகுதியினருக்கு வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையிலும் இன்னும் வீடுகள் கட்டி கொடுக்காமல் பணிகள் பாதிலேயே கிடப்பில் உள்ளது.
மேலும் புதிய வீடுகள் கட்டுவதால் பழைய சேதமடைந்த வீடுகளும் அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் வீடுகள் இல்லாமல் மலைப்பகுதிகளில் குடிசை அமைத்து வசிக்கும் அவல நிலையில் உள்ளனர். இந்நிலையில் பல நாட்களாக வீடு கட்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் அங்கு செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. எனவே கூடிய விரைவில் அரைகுறையாக விடப்பட்ட புதிய வீடுகள் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பழங்குடியின மக்கள் கண்ணீர் மல்க ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.