தமிழக குத்துச்சண்டை வீரருக்கு ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அபூர்வ அறுவை சிகிச்சை அளித்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கடலூரைச் சேர்ந்தவர் பாலாஜி(21). இவர் சென்னையில் இருக்கின்ற கல்லூரியில் பி.ஏ பொருளாதாரம் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றார். இவருக்கு குத்துச்சண்டை மீது மிகுந்த ஆர்வம். அதனால் சென்னையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் சேர்ந்து சேம் எபனேசர் என்ற பயிற்சியாளர் மூலம் குத்துச்சண்டை முறையாகக் கற்றுக் கொண்டுள்ளார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடந்த போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இதை தொடர்ந்து முதலமைச்சர் சுழற்கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்றார். அப்போது இவருடன் மோதிய சக வீரர் விட்ட குத்தால் இவருடைய இடது தோள்பட்டை மணிக்கட்டு இடம் மாறியது. ஆனாலும் அவர் அதை சரி செய்து அந்த போட்டியில் வலியுடன் விளையாடி வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் பல போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் நடந்த போட்டியில் பங்கேற்று விளையாட முடியாமல் திரும்பி சென்றுவிட்டார். பல பதக்கங்களை வென்ற பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருக்கின்ற பன்னோக்கு மருத்துவமனையில் தோள்பட்டை சீரமைப்புத் துறை பேராசிரியர் டாக்டர் லியனார்டு பொன்ராஜ் சந்தித்து ஆலோசனை பெற்றார். மருத்துவர் ஆலோசனையின்பேரில் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது குணமடைந்து ஓய்வு பெற்று வருகின்றார்.
இது குறித்து மருத்துவர் லியனார்டு பொன்ராஜ் கூறியிருப்பதாவது, மூட்டு உள்நோக்கி கருவி பாலாஜிக்கு இடது தோள்பட்டையில் ஏற்பட்ட பிரச்சனை போனி பாங்காட் எனப்படும். அதாவது தோள் மூட்டு கிண்ணத்தில் சவ்வோடு சேர்ந்து அந்தக் கிண்ணத்தில் எலும்பும் உடைந்துள்ளது. இது ஒரு அபூர்வமான பிரச்சனை. இந்த சிகிச்சையை நாடி வந்த போது மூட்டு உள்நோக்கி கருவி அறுவை சிகிச்சை தமிழக அரசு மருத்துவமனை வரலாற்றிலேயே முதன்முறையாக ஓமந்தூர் மருத்துவமனையில் சரி செய்யப்பட்டுள்ளன.
மேலும் இந்தப் பிரச்சனையோடு அவர் பல போட்டிகளில் பங்கேற்றதால் அருகில் இருந்த மற்ற இரண்டு சவ்வுகளும் சேதமடைந்துள்ளது. ஆதலால் மூன்று சவ்வுகளையும் சரி செய்வதற்கு 2 1/2 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக உள்நோக்கி சிகிச்சை மூலம் சேதமடைந்த பந்து முட்டு சரி செய்யப்பட்டன. தனியார் மருத்துவமனைகளுக்கு சவால் விடுகின்ற வகையில் இந்த அறுவை சிகிச்சை அளித்து சாதனை படைத்து இருக்கின்றோம். இதற்கு ஆலோசனை கொடுத்த மருத்துவமனை இயக்குனர் டாக்டர் விமலா மற்றும் நோயாளியை பரிந்துரை செய்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயல் மருத்துவர்ஆனந்தகுமார் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
இதுதொடர்பாக குத்துச்சண்டை வீரர் பாலாஜி கூறியதாவது, மருத்துவர்களுக்கு நன்றி. போட்டி நடக்கின்ற போது விழுந்த அடியால் என்னுடைய இடது கை மூட்டு சேதமடைந்துள்ளது. நான் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. தற்சமயம் ஓமந்தூர் மருத்துவமனையில் டாக்டர் லியனார்டு பொன்ராஜ் அளித்த சிகிச்சை மூலம் குணம் பெற்றுள்ளேன். மீண்டும் ஆறு மாதத்திற்கு பிறகு முழுமையாக குணமடைந்து மீண்டும் போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கங்களை பெறுவேன் என்று நம்பிக்கை இருக்கிறது. இதற்கு மருத்துவர்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன் என்று கூறினார்.