ட்விட்டர் இந்திய நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் மணிஷ் மகேஸ்வரியை கைது செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் காசியாபாத் என்ற பகுதியில் ஜெய் ஸ்ரீராம் என இஸ்லாமிய முதியவர் ஒருவர் கூறவில்லை என்பதற்காக அவரை துன்புறுத்தும் வீடியோ ஒன்று ட்விட்டரில் வேகமாக பரவியது. ஆனால் இந்த செய்தி பொய்யானது எனவும், இந்த வீடியோவை ட்விட்டரில் இருந்து நீக்க வேண்டும் எனவும், உத்தரப் பிரதேச மாநில போலீசார் டுவிட்டருக்கு அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் ட்விட்டர் நிறுவனம் அந்த வீடியோவை நீக்கவில்லை.
இதனால் ட்விட்டர் இந்திய எம்டி மணிஷ் மகேஸ்வரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவர் நேரில் ஆஜராக முடியாது என்றும், தேவைப்பட்டால் வீடியோகால் மூலம் பேசலாம் என்றும் பதிலளித்தார். இதைத்தொடர்ந்து உத்திரபிரதேச காவல்துறையினர் அவரை கைது செய்ய முயற்சி செய்தனர். இந்நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றம் அவரை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. தேவைப்பட்டால் மணிஷ் மகேஸ்வரியை காணொளி வாயிலாக காசியாபாத் போலீசார் விசாரணை செய்யலாம் எனவும் ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.