இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை வரவேற்கும் விதமாக மகாத்மா காந்தியின் மண்ணியிலிருந்து உங்களை வரவேற்கிறோம் என இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வீடியோவுடன் கூடிய ட்வீட்டை பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது குடும்பத்துடன் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று முற்பகல் 11.45 மணியளவில் தனி விமானம் மூலம் குஜராத்தின் அஹமதாபாத் நகருக்கு வந்த ட்ரம்பை நேரில் வரவேற்றார் பிரதமர் நரேந்திர மோடி. டொனால்டு ட்ரம்பின் இந்திய வருகையையொட்டி பலர் அவரை வரவேற்பு சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டனர்.
ஆனால் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பதிவிட்டுள்ள கருத்து இணையதள வாசிகளிடம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது பதிவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை காந்திய மண் அன்போடு வரவேற்கிறது என தெரிவித்திருந்தார். அஹமதாபாத் வந்திறங்கிய டொனால்டு ட்ரம்ப் அங்கியிருந்து மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு மனைவியுடன் சென்று சுற்றி பார்த்தார். பிறகு அசிரமத்தில் காந்தி பயன்படுத்திய நூல் நூற்கும் ராட்டையை ஆர்வமுடன் பார்த்தார் டிரம்ப்.
ஆசிரமத்தை விட்டு கிளம்புகையில் பார்வையாளர்கள் குறிப்பேட்டில், இந்த அற்புதமான பயணத்திற்காக எனது சிறந்த நண்பர் மோடிக்கு நன்றி என்று தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறி கையொப்பமிட்டார். காந்தியின் ஆசிரமத்திற்கு வந்த ட்ரம்ப் காந்தி குறித்து ஒரு வார்த்தை கூட எழுதாமல் மோடியை புகழ்ந்து எழுதியது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த பிரச்னையை பெரிதாக்கும் விதமாக ஏ.ஆர். ரஹ்மான் ட்விட்டர் பதிவை நெட்டிசன்கள் டிரென்ட் செய்து வருகின்றனர்.
Here's a track from us to welcome @POTUS to India 🇮🇳, the land of Gandhi. https://t.co/61rjyhxV16
— A.R.Rahman (@arrahman) February 24, 2020
அந்த ட்வீட்டுடன் சேர்த்து ஏ.ஆர். ரஹ்மான் ஒரு வீடியோவையும் பதிவிட்டுள்ளார். அதில் ‘செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமந் தரும்’ என்கிற திருக்குறள் தோன்றி மறைகிறது. நமக்கு தீமை செய்த ஒருவருக்கு நாம் தீமையை செய்தால் அது அளவு கடந்த துன்பத்தை தரும் என்பதே இந்த திருக்குறளின் விளக்கம். தற்போது இதனை எதற்கு ரஹ்மான் ஷேர் செய்தார் என விவாதங்கள் நடைபெற்று வருகிறது.