Categories
மாநில செய்திகள்

டோல்கேட்டுக்கு எதிர்ப்பு…. அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

கிருஷ்ணகிரி நகராட்சி எல்லைக்கு அருகில் சுங்கச்சாவடி அமைப்பதை எதிர்த்த வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராஜன் குட்டையை சேர்ந்த ரமேஷ் என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த வழக்கில் கிருஷ்ணகிரி நகராட்சியில் இருந்து 4.3 கிலோ மீட்டர் தொலைவில்  உள்ள பெரிய பனமுட்லு அருகே சுங்கச்சாவடி அமைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. திண்டிவனம், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் 11 ஆண்டு காலமாக நடைபெற்று வருகின்றது. இந்த சுங்கச்சாவடி அமைந்தால் ஜெகதேவி, தொகரப்பள்ளி, ஜகுந்தம், போச்சம்பள்ளி, சாந்தூர், மாதூர், ஊத்தங்கரை, கல்லாவி, வேட்டையம்பட்டி, அஞ்சூர் போன்ற ஊர்களை சேர்ந்த வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளாக நேரிடும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லவேண்டும் என்றால் கூட சுங்க கட்டணம் செலுத்தி தான் பெங்களூர் சாலையைப் பயன்படுத்தும் நிலைமைக்குத் தள்ளப்படுவார்கள். இதனால் அப்பகுதியில் சுங்கச் சாவடி அமைக்கும் திட்டத்தை கைவிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பாக விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஒரே சுங்கச்சாவடி உள்ள நிலையில் அதில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புதிய சுங்கச்சாவடி அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், நெடுஞ்சாலை கட்டண விதிகளில் குறிப்பிட்டுள்ளபடி நகராட்சி பகுதியிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில்தான் சுங்கச்சாவடி அமைக்க வேண்டுமென்ற விதிகள் மீறப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது. பின்னர் இந்த வழக்கு குறித்து நெடுஞ்சாலைத்துறை,  மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு இந்த வழக்கை ஜனவரி 25ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

Categories

Tech |