காரை ஓட்டி பார்ப்பதாக கூறி 16 லட்சம் ரூபாய் காரை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் பகுதியில் பழைய கார்கள் விற்பனை நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று 2 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து காரை வாங்க விரும்புவதாக கூறியுள்ளனர். இதனையடுத்து கார் விற்பனை நிலையத்தில் இருந்த 16 லட்சம் ரூபாய் காரை வாங்குவதாக கூறி ஓட்டி பார்ப்பதற்கு கேட்டனர். இதனை நம்பிய விற்பனை நிலைய மேலாளர் ரமேஷும் அவர்களுடன் காரில் சென்றுள்ளார்.
இதனையடுத்து நாமக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மர்ம நபர்கள் காரை நிறுத்தி காரில் இருந்து தேவையற்ற சத்தம் கேட்பதாக கூறி கீழே இறங்கியுள்ளனர். அப்போது மேலாளரும் காரில் இருந்தி இறங்கியதும் அவரை கீழே தள்ளிவிட்டு மர்மநபர்கள் காரை ஓட்டிக் கொண்டு தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் நாமக்கல் துணை சூப்பிரண்டு அதிகாரி, நல்லிபாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.