டெல்லி பல்கலைகழகத்தின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக பட்டப்படிப்பு முடிக்காத மாணவர்கள் அதை நிறைவுசெய்ய ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் விதமாக வழிவகை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் படிப்பை கைவிட்டவர்கள், தொடர முடியாதவர்கள் மீண்டும் தேர்வெழுதி தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்திகொண்டு ராஜேஷ்குமார் ராவத் (வயது 70) என்பவர் முதுநிலைக்கான சட்டபடிப்பில் படிக்க விண்ணப்பித்துள்ளார். அவர் 42 வருடங்களுக்கு முன்பு லக்னோவில் எல்.எல்.பி. எனப்படும் இளநிலை சட்டப்படிப்பு முடித்ததும், சி.பி.ஐ.யில் பணியில் சேர்ந்து இருக்கிறார். இதையடுத்து டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
டெல்லி பல்கலைகழகத்தில் கடந்த 1979ஆம் வருடம் முதுநிலைக்கான சட்டபடிப்பில் படிக்க விண்ணப்பித்து இருக்கிறார். சி.பி.ஐ. பணியிலிருந்த அவரால் அடிக்கடி வெளியூருக்கு போகவேண்டி இருந்துள்ளது. இதன் காரணமாக அவரால் படிப்பை தொடரமுடியாமல் அதனை விட்டுவிட்டார். இந்த நிலையில் டெல்லி பல்கலைகழகம் வழங்கியுள்ள இந்த அரிய வாய்ப்பின்படி, 8,200 முன்னாள் மாணவர்கள் 2-வது முறையாக படிப்பை நிறைவுசெய்ய விண்ணப்பித்திருக்கின்றனர். இவர்களில் ராஜேஷும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அவர் கூறியதாவது, தங்களுடைய படிப்பை நிறைவுசெய்ய விரும்பும் ஒவ்வொருவருக்கும் கிடைத்த பெரிய சந்தர்ப்பம் இது.
நீண்ட கால ஆசை இதனால் நிறைவடையும். இந்த வாய்ப்பினை வழங்கியதற்காக டெல்லி பல்கலைகழகத்திற்கு நன்றி கூற விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார். அவர் முதுநிலை சட்டப்படிப்பை கைவிட்டபோதிலும், பட்டப்படிப்பை நிறைவு செய்யும் ஆர்வத்தில் இருந்துள்ளார். அதனை தொடர்ந்து பல்வேறு பல்கலைகழகங்களிலும் தன் விடுபட்ட படிப்பை தொடர முயற்சித்துள்ளார். எனினும் அது நடக்கவில்லை. இறுதியில் டெல்லி பல்கலைகழகத்தின் இந்த சிறப்பு திட்ட அறிவிப்பு குறித்து அறிந்து அதற்கு விண்ணப்பித்திருக்கிறார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
அவர்கள் கல்வி பயின்று வேலைக்கு சென்றுவிட்ட சூழ்நிலையில், நான் என் படிப்பை மீண்டும் தொடங்கியுள்ளேன் என கூறியுள்ளார். என் குடும்பத்தினரும் என்னுடைய முடிவுக்கு ஆதரவாக இருக்கின்றனர். வயது கல்விக்கு ஒரு தடை இல்லை. ஓய்வுபெற்று விட்டேன் என்பதற்காக செய்வதற்கு எதுவுமில்லை என எண்ணகூடாது. மாணவராக இருப்பது நல்லதே ஆகும். இது ஒரு புதுவிதமான அனுபவம் ஆகும். கல்வி கற்பது நிற்ககூடாது என முன்னாள் சி.பி.ஐ. பணியாளரான ராஜேஷ் தெரிவித்துள்ளார். கல்விக்கு கரை இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக 70 வயதிலும் கிடைத்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திகொண்டு தன் கல்விகற்கும் கனவை தொடரும் ஆவலுடன் அவரை போன்று பலரும் முன்வந்துள்ளது வரவேற்புக்குரியது.