உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனாவால் மக்கள் பீதியில் உள்ளனர். மேலும் டெல்டா, டெல்டா பிளஸ், பீட்டா என உருமாற்றமடைந்த புதிய வகை கொரோனா வைரஸ்கள் அடுத்தடுத்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அதனை தொடர்ந்து தென்ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ‘ஒமிக்ரான்’ வைரஸ் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் ‘டெல்மிக்ரான்’ என்ற புதிய வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து தற்போது உருமாற்றம் அடைந்த புதிய வகை ‘டெல்டாக்ரான்’ வைரஸ் ஒரு சில நாடுகளில் தென்பட தொடங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் சைப்ரஸ் நாட்டில் முதல் முறையாக ‘டெல்டாக்ரான்’ என்ற புதிய வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த புதிய ‘டெல்டாக்ரான்’ வைரஸ் ஒமிக்ரானின் சில திரிபுகளையும், டெல்டா வகையின் மரபு பின்னணியையும் ஒத்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த புதிய ‘டெல்டாக்ரான்’ வைரஸ் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த புதிய வகை வைரசுக்கு அறிவியல் பெயர் எதுவும் அறிவிக்கப்படவில்லை.